கொடைக்கானலில் அடுத்தடுத்த 5 கடைகளில் பற்றி எரிந்த தீ


கொடைக்கானலில் அடுத்தடுத்த 5 கடைகளில் பற்றி எரிந்த தீ
x
தினத்தந்தி 25 April 2023 2:30 AM IST (Updated: 25 April 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் அடுத்தடுத்த 5 கடைகளில் தீப்பிடித்து எரிந்தது.

திண்டுக்கல்

கொடைக்கானலில் அடுத்தடுத்த 5 கடைகளில் தீப்பிடித்து எரிந்தது.

கடைகளில் தீ

கொடைக்கானல் நாயுடுபுரத்தில் தனியார் பள்ளிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில், டீக்கடை, மளிகை கடை, கம்பளி துணிகள் விற்பனை கடை என 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் அங்குள்ள ஒரு கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அந்த கடை தீப்பிடித்து எரிந்தது. மேலும் அடுத்தடுத்து உள்ள 4 கடைகளுக்கும் தீ பரவியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் கடைகளில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் 5 கடைகளில் பொருட்கள் எரிந்து நாசமானது.

பொருட்கள் நாசம்

பின்னர் கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். விசாரணையில், இந்த தீவிபத்தில் வணிக வளாகத்தில் இருந்த காதர் என்பவரது கம்பளி கடை, வேளார் என்பவரது காய்கறி கடை, ஜோஸ்வாவின் டீக்கடை, குட்டி என்கிற சலேத்நாதனின் டிராவல்ஸ் அலுவலகம், மணி என்பவரது லாரி முன்பதிவு அலுவலகம் ஆகிய 5 கடைகள் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. மேலும் கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் மழை பெய்தபோது, அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் மின்கசிவு ஏற்பட்டு கடைகளில் தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தீவிபத்தில் கடைகளில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே தீவிபத்து ஏற்பட்ட கடைகளை நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், கவுன்சிலர் கணேசன், துணை தாசில்தார் ஜெயராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story