என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நடந்த கருத்துகேட்பு கூட்டத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினர் 26 பேர் கைது
சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நடந்த கருத்து கேட்பு கூட்டத்தை முற்றுகையிட முயன்ற பா.ம.க.வினர் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேத்தியாத்தோப்பு,
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்த கருத்து கேட்பு கூட்டம் சேத்தியாத்தோப்பு பூதங்குடி பயணியர் விடுதியில் தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள், வீடு, நிலம் கொடுத்த கத்தாழை, கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, அம்மன் குப்பம், ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முற்றுகையிட...
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் செல்வ.பிரதீஷ் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் முருகானந்தம், அரிபுத்திரன், தலைக்குளம் சங்கர், சரண்ராஜ், நகர செயலாளர் கலைமணி, மாவட்ட துணை செயலாளர் இளையராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் விஷ்ணு மற்றும் பா.ம.க.வினர், என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த கருத்து கேட்பு கூட்டம் ரகசியமாக நடத்தப்படுகிறது. இதை வெளிப்படையாக நடத்த வேண்டும், மேலும் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும், வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டத்தை முற்றுகையிடுவதற்காக புறப்பட்டனர்.
26 பேர் கைது
இதுபற்றி அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார், இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் ஒரத்தூர் போலீசார் அவர்களை பாழ்வாய்க்கால் பெட்ரோல் பங்க் அருகே தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சமரசம் ஆகாத பா.ம.க.வினர், போலீசாரின் தடுப்பையும் மீறி செல்ல முயன்றனர். இதையடுத்து அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் செல்வ.பிரதீஷ் உள்பட 26 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.