கோவில்பட்டியில் ராகுல்காந்தி பாதயாத்திரை குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டியில் ராகுல்காந்தி பாதயாத்திரை குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோரா யாத்திரை தொடங்குகிறார். இந்த யாத்திரை தொடர்பான காங்கிரஸ் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நேற்று காலையில் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜர் தலைமை தாங்கினா். மாவட்டத் துணைத் தலைவர்கள் திருப்பதி ராஜா, கந்தசாமி மாவட்ட செயலாளர்கள் துரைராஜ் சண்முகராஜ், பொதுச்செயலாளர் சுப்புராயலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கார்த்திக் சிதம்பரம், எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ., மாநில செயலாளர் அருள் பெத்தையா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் கார்த்தி சிதம்பரம் கூறுகையில், ராகுல்காந்தியின் பாதயாத்திரையை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்தி காட்டுவோம். விசா வழங்கியது தொடர்பான பிரச்சினையில் ஆதாரம் இருக்கிறது என்று கூறும் மத்திய அரசு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நிரூபிக்க வேண்டும். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக மத்திய அரசு என் மீது குற்றசாட்டு சொல்கிறது. ஆதாரம் இருந்தால் அவற்றை மத்திய அரசு கோர்ட்டில் வழங்க வேண்டும், என்றார்.