வேலைக்கு செல்லும் பெண்கள் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்க பாதுகாப்பு பெட்டகம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
அரசு அலுவலகம்-தனியார்நிறுவனங்களில வேலைக்கு செல்லும் பெண்கள் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்க பாதுகாப்பு பெட்டகம் வைக்குப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்க பாதுகாப்பு பெட்டகம் வைக்கப்படும் என சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
பாதுகாப்பு பெட்டகம்
தூத்துக்குடி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் பாதுகாப்பு பெட்டகம் (புகார்பெட்டி) திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து வைத்து அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பெண்ணியம் போற்றுவோம், பெண்கள் பாதுகாப்புக்கான கையெழுத்து பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார்.
பெண்களுக்கு பாதுகாப்பு
அப்போது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சமூக நலத்துறையின் சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள், குற்றசெயல்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நாடகங்கள், பேரணிகள், பிரசாரங்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அரசுஅலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட குற்றங்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டு, புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக அவர்கள் பணிபுரியும் இடம் இருக்க வேண்டும்.
சட்டப்படி நடவடிக்கை
பணிபுரியும் இடத்தில் பாதுகாப்புடன் இருந்தால் மனமகிழ்ச்சியோடு பணிபுரியலாம். இந்த சட்டத்தை பற்றி ஒவ்வொரு பெண்கள், குழந்தைகள், நமது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதே போன்று ஒவ்வொரு குழந்தை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் ஆகியவை கட்டாயம் சமூகநலத்துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத இல்லங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 181 என்ற கட்டணமில்லா எண்ணில் அனைவரும் புகார் தெரிவிக்கலாம்.
சேவை மையம்
ஒருங்கிணைந்த சேவைமையம் ஒன்று தூத்துக்குடி மாநகராட்சியில் செயல்படுத்த இருக்கிறோம். பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த சேவை மையத்தில் தெரிவிக்கலாம். இந்த சேவை மையம் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டு பெண்களின் வாழ்க்கைக்கு ஒரு பாலமாகவும் செயல்படும். 24 மணிநேரமும் இந்தமையம் செயல்படும். புகார் அளிப்பவரின் ரகசியம் காக்கப்படும். பெண்களுக்கான எல்லா உதவிகளும் இந்த மையத்தின் மூலம் வழங்கப்படும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் வக்கீல் சொர்ணலதா, நிலா சீபுட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் செல்வின் பிரபு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.