ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்து மத்திய குழு ஆய்வு
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
மத்திய குழு ஆய்வு
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் மாமண்டூர், களத்தூர், ஆலப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் ஜல் ஜீவன் மிஷ்ன் குறித்து, மத்திய குழுவின் சிறப்பு பொறியாளர் சுபாஷ்குமார் சவுத்ரி தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இத்திட்டத்தின் வாயிலாக அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கபட்டுள்ளதா? என்றும், குடிநீரின் தன்மை, மற்றும் மாதம் தோறும் குடிநீர் ஆய்வு செய்யப்படுகிறா? என்பது உள்ளிட்ட விளக்கங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இதனையடுத்து குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், மகளிர் குழுவினர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடமும் இக்குழுவினர் விளக்கங்கள் கேட்டறிந்தனர். அப்போது அவர்கள் தண்ணீரின் காரத்தன்மை, கடினத்தன்மை, குளோரைடு, உள்ளிட்ட 13-வகையான ஆய்வுகள் மேற்கொள்வதாக தெரிவித்தனர்.
குறைகள் உள்ளதா?
பின்னர் இக்குழுவினர் அப்பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கி உள்ள வீடுகளுக்கு சென்று சீராக தண்ணீர் வருகிறதா? என்பதை ஆய்வு செய்து, குறைகள் ஏதும் உள்ளதா? எனவும் பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். அப்போது வேதியியல் நிபுணர் முரளி, திட்ட இயக்குனர் லோகநாயகி, உதவி திட்ட அலுவலர் கவுரி, வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டாயுதபாணி, ஒன்றிய பொறியாளர் ஏகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுலோச்சனா பிரகாஷ், மரியப்பிரகாசி கிருஷ்ணன், சாந்தி சுப்பிரமணி, பணி மேற்பார்வையாளர் டீகாராமன், ஊராட்சி செயலர்கள் சங்கர், மகேந்திரன், அருள்பாண்டியன், வில்விஜியன் உடனிருந்தனர்.