ரூ.3 கோடி மோசடி செய்து தலைமறைவானவர் சிக்கினார்
ஆம்பூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி வரை மோசடி செய்துவிட்டு 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து விட்டு திருமணத்திற்கு வந்தவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
ஏலச்சீட்டு நடத்தி மோசடி
ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியை சேர்ந்தவர் அஸ்லாம்பாஷா. இவரும் ஜலால்பேட்டை பகுதியைச் சேர்ந்த மசியுல்லா (வயது 48) என்பவரும் வரும் சேர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆம்பூரில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இதில் ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் தொகை என பல சீட்டுகள் நடத்தி உள்ளனர். ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இவர்களிடம் சீட்டுகட்டி வந்துள்ளனர்.
சீட்டு நடத்தி வந்த இவர்கள் இருவரும் ரூ.3 கோடி வரை மோசடி செய்து விட்டு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திடீரென தலைமறைவாகி விட்டனர். இதனால் சீட்டு கட்டிய பொதுமக்கள் செய்வதறியாமல் திகைத்து வந்தனர். இந்தநிலையில் நேற்று ஆம்பூர் மோட்டுகொல்லை பகுதியில் நடந்த திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மசியுல்லா வந்துள்ளார்.
பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
இதனை அறிந்ததும், சீட்டு கட்டி ஏமாந்த பொதுமக்கள் அவரை பிடிக்க முயன்றனர். உடனே அவர் அங்குள்ள ஒரு வீட்டில் புகுந்து உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். அந்த வீட்டின் முன்பு பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்ததும் ஆம்பூர் டவுன் போலீசார் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர். பின்னர் வீட்டுக்குள் இருந்த மசியுல்லாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள ரெட்டித்தோப்பு பகுதியை சேர்ந்த அஸ்லாம்பாஷா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். ஏலச் சீட்டு நடத்தி ரூ.3 கோடி வரை மோசடி செய்து விட்டு 1½ வருடம் தலைமறைவாக இருந்துவிட்டு திருமணத்திற்கு வந்தவரை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.