உடன்குடி பகுதியில் அமோக விளைச்சல்:முருங்கைக்காய் கிலோ ரூ.5-க்கு விற்பனை


தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி பகுதியில் அமோக விளைச்சல் ஏற்பட்டு இருப்பதால், முருங்கைக்காய் கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் அமோகமாக இருப்பதால், விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று முருங்கைக்காய் கிலோ ரூ.5-க்கு விற்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

முருங்கை விவசாயம்

உடன்குடி பேரூராட்சி மற்றும் மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, லட்சுமிபுரம், குலசேகரன்பட்டினம், மணப்பாடு, செட்டியா பத்து, தண்டுபத்து உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் பனை, தென்னை, முருங்கை விவசாயம் மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் முருங்கை தோட்டங்களாக காட்சியளிக்கிறது.

இங்கிருந்து தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

விலை வீழ்ச்சி

இந்த நிலையில் கடந்த வாரம் வரை ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது முருங்கைக்காய் விளைச்சல் அமோகமாக இருக்கிறது. செடிகளில் முருங்கை காய்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்குகின்றனர. தினமும் ஒவ்வொரு தோட்டத்தில் இருந்தும் 50 கிலோ முதல் 100 கிலோ வரை முருங்கைக்காய் பறிக்கப்பட்டு, விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதை தொடர்ந்து உடன்குடி மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து காய்கறி கடைகளிலும் முருங்கைக்காய் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் முருங்கைக்காய் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நேற்று கிலோ முருங்கைக்காய் ரூ.5-க்கு விற்கப்பட்டது. இது விவசாயிகள் மத்தியில் கவலைைய ஏற்படுத்தி உள்ளது.


Next Story