ஏ.சி. பழுதை சரி செய்யாததால் அவதி: திருப்பூரில் ரெயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம்


ஏ.சி. பழுதை சரி செய்யாததால் அவதி: திருப்பூரில் ரெயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம்
x

ஏ.சி. பழுதானதால் திருப்பூரில் நள்ளிரவில் ரெயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம் நடத்தினர். இதனால் 1¼ மணி நேரம் ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

திருப்பூர்,

கர்நாடக மாநிலம் கூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் மதியம் கூப்ளியில் இருந்து புறப்பட்டது. பெங்களூரு ரெயில் நிலையத்துக்கு வந்தபோது அந்த ரெயிலில் ஏ1 எண் கொண்ட குளிர்சாதன பெட்டியில் ஏ.சி.யில் பழுது ஏற்பட்டது.

ஏ.சி. சரியாக இயங்காததால் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள். இது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். அவர்கள் ஏ.சி. பழுதை சரி செய்வதாக தெரிவித்தனர். ஆனால் பழுது நீக்கப்படவில்லை. அந்த ரெயில் சேலம் கடந்து ஈரோட்டுக்கும் வந்தது. அங்கு வந்ததும் ரெயில்வே எலெக்ட்ரீசியன் ரெயிலில் ஏறி பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

ரெயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம்

ரெயில் ஓடும் போது பழுதை சீரமைக்கலாம் என்று நினைத்து ஈரோட்டில் இருந்து திருப்பூர் புறப்பட்டதும் ஏ.சி. பழுதை சரி செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் ஏ.சி. இயங்கவில்லை. இந்த நிலையில் இரவு 10.53 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்தது. பின்னர் ரெயில் புறப்பட்டபோது ஏ.1 குளிர்சாதன பெட்டியில் பயணித்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் ரெயில் நின்றது.

அந்த பெட்டியில் பயணித்த பயணிகள் ரெயிலில் இருந்து கீழே இறங்கி ரெயில் நிலையத்தின் நடைமேடையில் நின்று ரெயிலில் ஏறாமல் போராட்டம் நடத்தினார்கள். அங்கு வந்த ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முருகன், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் ரெயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பயணிகள் அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

1¼ மணி நேரம் தாமதம்

பின்னர் போத்தனூர் ரெயில் நிலையத்தில் மாற்றுப்பெட்டி இணைத்து ரெயில் இயக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகு பயணிகள் போராட்டத்தை கைவிட்டு ரெயிலில் ஏறினார்கள். இதனால் நள்ளிரவு சுமார் 1¼ மணி நேரம் தாமதமாக 12.05 மணிக்கு ரெயில் திருப்பூரில் இருந்து புறப்பட்டது. அந்த ரெயில் நீண்ட நேரம் நின்றதால் அந்த வழியாக வந்த ரெயில்கள் மாற்று தண்டவாளத்தில் இயக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பிறகு போத்தனூர் சென்றதும் ஏ.1 எண் கொண்ட குளிர்சாதன பெட்டியை கழற்றி, மாற்றுப்பெட்டி பொருத்தப்பட்டு கொச்சுவேலிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது.


Related Tags :
Next Story