10-ம் வகுப்பு தேர்வில் மகன் தேர்ச்சி பெறாததால் மெக்கானிக் தற்கொலை
10-ம் வகுப்பு தேர்வில் மகன் தேர்ச்சி பெறாததால் மெக்கானிக் தற்கொலை
மடத்துக்குளம்
மடத்துக்குளம் பகுதியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தேர்ச்சி பெறாததால் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஏ.சி.மெக்கானிக் தற்கொலை
மடத்துக்குளம் அருகே உள்ள பெரிய வட்டாரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 46). ஏ.சி. மெக்கானிக். இவருடைய மனைவி மதலை மேரி. தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். . சமீபத்தில் வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் சந்திரமோகனின் மூத்த மகன் தேர்ச்சி பெறவில்லை. இதனால் சந்திரமோகன் மனவேதனையில் இருந்துள்ளார். மேலும் அவருக்கு பண நெருக்கடியும் இருந்துள்ளது. இந்த நிலையில் கணவருக்கு ஆறுதல் சொல்லிய மதலை மேரி நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் பணி முடிந்து நேற்று காலை 10.30 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது மகன்கள் வீட்டில் இல்லை. கதவு உட்புறம் தாளிடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தார். அப்போது வீட்டிற்குள் சந்திரமோகன் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மதலைமேரி சத்தமிட்டு அழத் தொடங்கினார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் வந்து கதவை உடைத்து உள்ேள சென்று சந்திரமோகன் உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தேர்ச்சி பெறாத காரணத்தால் ஏ.சி. மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
---