சாலையோரம் நின்று கொண்டு இருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் பலி
கோட்டூர் அருகே சாலையோரம் நின்று கொண்டு இருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேரும் பரிதாபமாக பலியானார்கள்.
கோட்டூர் அருகே சாலையோரம் நின்று கொண்டு இருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேரும் பரிதாபமாக பலியானார்கள்.
பிரசவத்துக்கு அனுமதி
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள செருகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 36). விவசாயியான இவருடைய மனைவி வனிதா(30). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வனிதாவை முருகானந்தம் நேற்று முன்தினம் பிரசவத்துக்காக திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
பின்னர் மீண்டும் ஊருக்கு வந்து மனைவிக்கு தேவையான உடைகளை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தார்.
நின்று கொண்டு இருந்தவர் மீது மோதல்
கோட்டூர் அருகே சித்தமல்லி கடைத்தெரு பகுதியில் சென்றபோது எதிரே வந்த பஸ்சுக்கு முருகானந்தம் வழி விடுவதற்கு முயன்றார். அப்போது சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்த சித்தமல்லி ஏ.கே.எஸ். நகரை சேர்ந்த கியாஸ் ஏஜென்சி மேலாளர் ஜெயப்பிரகாஷ்(40) என்பவர் மீது முருகானந்தம் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் முருகானந்தம் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிள் மோதியதில் ஜெயப்பிரகாஷ் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
2 பேரும் பலி
விபத்து நடந்தவுடன் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து முருகானந்தத்தை சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஜெயப்பிரகாசை சிகிச்சைக்காக சித்தமல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் 2 பேர் பலியானது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.