மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து பெண் பலி
மோட்டார்சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதில் தவறி விழுந்து பெண் பலியானார்.
அருப்புக்கோட்டை
மோட்டார்சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதில் தவறி விழுந்து பெண் பலியானார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.
சேலை சிக்கியது
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி தீர்த்தக்கரை பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 42). இவருடைய மனைவி தனலட்சுமி (39). சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சண்முகவேல் ேமாட்டார்சைக்கிளை ஓட்டினார். தனலட்சுமி பின்னால் அமர்ந்திருந்தார். ெரயில்வே மேம்பாலத்தின் மீது மோட்டார்சைக்கிள் சென்று கொண்டிருந்தது.
அப்போது காற்று பலமாக வீசியதால் தனலட்சுமியின் சேலை மோட்டார்சைக்கிளின் சக்கரத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
பெண் பலி
இந்த விபத்தில் சண்முகவேல் மற்றும் அவருடைய மனைவி தனலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தனலட்சுமி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். சண்முகவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.