சரக்கு வேன்கள் மீது கார் மோதல்; 3 பேர் படுகாயம்
பழனி அருகே சரக்கு வேன்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தணக்கன்குளத்தை சேர்ந்தவர் குமார் (வயது 39). இன்று இவர், பழனியில் இருந்து உடுமலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
பழனியை அடுத்த வண்டிவாய்க்கால் பகுதியில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த 2 சரக்குவேன்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் குமார் மற்றும் சரக்கு வேன்களின் டிரைவர்களான திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டியன் (35), கொத்தயத்தை சேர்ந்த தண்டபாணி (46) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் பழனி ராமநாதன்நகரை சேர்ந்த சண்முகவேல் (33), மோட்டார் சைக்கிளில் பழனிக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். இடும்பன்கோவில் சாலையில் வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விரு சம்பவங்கள் குறித்து முறையே பழனி தாலுகா, டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.