அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் 20 அடி பள்ளத்துக்குள் பாய்ந்த அரசு பஸ்; 17 பேர் படுகாயம்
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் 20 அடி பள்ளத்துக்குள் அரசு பஸ் பாய்ந்ததில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் 20 அடி பள்ளத்துக்குள் அரசு பஸ் பாய்ந்ததில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
59 பயணிகள்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கொங்காடை கிராமத்துக்கு அரசு பஸ் ஒன்று நேற்று மதியம் 2.15 மணி அளவில் புறப்பட்டது. பஸ்சை அந்தியூர் அருகே உள்ள சின்ன பருவாச்சியை சேர்ந்த வெங்கடசாமி (வயது 39) என்பவர் ஓட்டினார். அந்தியூர் அருகே உள்ள குந்துபாயூர் பகுதியை சேர்ந்த சதான் (30) என்பவர் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் 59 பயணிகள் இருந்தனர்.
மலைப்பகுதியில் மணியாச்சி பள்ளம் அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிளுக்கு இடம் விடுவதற்காக பஸ்சை டிரைவர் ரோட்டோரமாக நகர்த்தி சென்றார்.
17 பேர் காயம்
அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பஸ் 20 அடி பள்ளத்துக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் பஸ் குட்டிக்கரணம் அடித்து பள்ளத்தில் விழுந்தது. இதில் கோவில்நத்தம் பகுதியை சேர்ந்த பொன்னம்மாள் (60), நீதிபுறம் பகுதி சேர்ந்த ராசம்மாள் (58), காளியம்மாள் (65), செல்லம்மாள் (45), செல்வன் (40), சின்னப்பி (40), மல்லிகா (26), ஈரண்ணன் (40), தாயம்மாள் (40), தேவராஜ் கணேசன் (50), அவருடைய மகன் பிரசாந்த் (4) உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதி வழியாக சென்றவர்கள், படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆறுதல்
மேலும் இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். பின்னர் அவர் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இதில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து பற்றி அறிந்ததும் அந்தியூர் தாசில்தார் விஜயகுமார், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷிணி, அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.