விபத்தில் காயமடைந்த வாலிபருக்கு திருஷ்டி கழிக்க ஆட்டு குட்டியுடன் வந்த உறவினர்கள்-ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு
ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 24). இவர் கடந்த 25-ந் தேதி தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் பேரண்டப்பள்ளி பகுதியில் சென்றார். அப்போது திடீரென அவர்கள் 2 பேரும் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தனர். முருகன் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் பலரது கண் திருஷ்டி காரணமாகவே முருகன் விபத்தில் சிக்கியதாக அவரது உறவினர்கள் எண்ணினர். இதனால் நேற்று அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வெள்ளாட்டு குட்டியுடன் வந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் குல வழக்கப்படி ஆட்டு குட்டியை சுற்றி முருகனுக்கு திருஷ்டி கழித்தனர். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முருகனின் உறவினர்கள் விபத்து நடந்த இடத்தில் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் ஆட்டு குட்டியை பலி கொடுத்தனர்.