ஓசூரில் டீ குடிக்க சென்றபோது பரிதாபம்: வாகனம் மோதி 2 தொழிலாளர்கள் பலி
ஓசூர்:
ஓசூரில் டீ குடிக்க சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி 2 தொழிலாளர்கள் பலியாகினர்.
தொழிலாளர்கள்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் பாலமுருகன் (வயது 22). கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவில் உள்ள கீரவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெபித் (29).
இவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் 2-வது சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த 6 மாதங்களாக ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். மேலும் ஓசூர் குமுதேப்பள்ளி பகுதியில் ஒரே அறையில் தங்கி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு பாலமுருகன், ஜெபித் ஆகியோர் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். இரவு பணியை முடித்து விட்டு அதிகாலை 4 மணி அளவில் அவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தங்கள் அறைக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பாலமுருகன் ஓட்டி சென்றார்.
2 பேர் பலி
அப்போது அவர்கள் டீ குடிப்பதற்காக கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டல் அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலமுருகன் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஜெபித் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெபித் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் பலியான பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.