தர்மபுரி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி-படிக்கட்டில் பயணித்தபோது விபரீதம்


தர்மபுரி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி-படிக்கட்டில் பயணித்தபோது விபரீதம்
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

என்ஜினீயர்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பகுதியை சேர்ந்தவர் ஜியாஉல்ஹக் (வயது 34). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

இந்த நிலையில் ஜியாஉல்ஹக் தர்மபுரியில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்தார். அங்கிருந்து பி.துரிஞ்சிபட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். இதனால் தர்மபுரியில் இருந்து பொம்மிடி செல்லும் அரசு பஸ்சில் புறப்பட்டார்.

படிக்கட்டில் பயணம்

இந்த பஸ் செம்மணஅள்ளி அருகே சென்றபோது வளைவில் திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது பஸ்சில் முன்பக்க படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த ஜியாஉல்ஹக் எதிர்பாராத விதமாக பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அந்த பஸ்சில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டது. அதில் மீட்கப்பட்ட ஜியாஉல்ஹக் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பலி

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story