மத்தூர் அருகே வாகனம் மோதி சிக்கன் கடை உரிமையாளர் பலி
மத்தூர்:
மத்தூர் அருகே வாகனம் மோதிய விபத்தில் சிக்கன் கடை உரிமையாளர் பலியானார்.
சிக்கன் கடை உரிமையாளர்
மத்தூர் அருகே உள்ள கூச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல் (வயது 49). இவர் கண்ணன்டஅள்ளி கூட்டு ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகே சிக்கன் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் கடைக்கு சென்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டார்.
பின்னர் இரவு வியாபாரத்தை முடித்து கொண்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். வழியில் கூச்சூர் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் ஸ்கூட்டர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகவேல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து மத்தூர் போலீசாருக்கு அந்த வழியாக சென்றவர்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான முருகவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, முருகவேல் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானாரா? அல்லது ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் சிக்கன் கடை உரிமை யாளர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.