ஓமலூர் அருகே சரபங்கா ஆற்றில் கார் பாய்ந்து 5 பேர் காயம்
ஓமலூர் அருகே சரபங்கா ஆற்றில் கார் பாய்ந்து 5 பேர் காயம் அடைந்தனர்.
ஓமலூர்:
ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி-பொம்மிடி ரோட்டில் நேற்று காலை ஒரு கார் வந்தது. அந்த கார் திடீெரன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டேனிஷ்பேட்டை கோட்டேரி அருகே சரபங்கா ஆற்றுப்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் கார் நொறுங்கியது. காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று காரில் இருந்த 5 பேரை மீட்டனர். பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட காரில் வந்த 5 பேரும் ஏற்காடு சென்று விட்டு கன்னப்பாடி வழியாக கணவாய் புதூர் வந்து அங்கிருந்து டேனிஷ்பேட்டை, தீவட்டிப்பட்டி வழியாக பெங்களூரு செல்ல இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் பெயர் விவரம் ஏதும் தெரியவில்லை. தொடர்ந்து அவர்கள் யார் என்பது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.