மொடக்குறிச்சி அருகே ரெயில்வே நுழைவு பாலத்தில் சிக்கிய லாரி- 10 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மொடக்குறிச்சி அருகே ரெயில்வே நுழைவு பாலத்தில் சிக்கிக்கொண்ட லாரியால் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே ரெயில்வே நுழைவு பாலத்தில் சிக்கிக்கொண்ட லாரியால் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பாலத்தில் சிக்கிய லாரி
ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் மெயின் ரோட்டில் மொடக்குறிச்சியை அடுத்த கேட் புதூர் அருகே ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. இப்பாலம் வழியாக அதிக உயரம் கொண்ட பாரம் ஏற்றிய லாரிகள் செல்வதால் பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இருபுறமும் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கரூரில் இருந்து ஈரோடு நோக்கி சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. கேட்புதூர் ரெயில்வே நுழைவு பாலத்தில் செல்ல முயன்றபோது தடுப்பு கம்பியில் லாரியின் மேல் பகுதி சிக்கிக்கொண்டது. இதனால் கம்பி உடைந்து லாரியின் மீது விழுந்தது.
மாற்றுப்பாதையில் போக்குவரத்து
இதன் காரணமாக அந்த வழியாக வேறு எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் கார், பஸ், லாரி, இருசக்கர வாகனம் என ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுபற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை ஓழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. ஈரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் சோலார் வழியாக மொடக்குறிச்சி வந்து கணபதிபாளையம் நால்ரோடு வழியாக கரூர் மெயின் ரோட்டை அடைந்தன.
போக்குவரத்து பாதிப்பு
இதுபற்றி அறிந்ததும் ரெயில்வே நிர்வாகத்தினர் நேற்று பகலில் அங்கு சென்றனர். அதைத்தொடர்ந்து கிரேன் மூலம் சேதமடைந்த தடுப்பு கம்பியை அகற்றி வேறு புதிய கம்பிகள் அமைக்கப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீரானது. வாகனங்கள் வழக்கம்போல் அந்த நுழைவு பாலம் வழியாக சென்று வந்தன.
இந்த விபத்தால் ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் சுமார் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபோன்று அடிக்கடி தடுப்பு கம்பிகள் உடைவதை தடுக்க ரெயில்வே நிர்வாகம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகனஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.