லாரி மோதி கல்லூரி மாணவன் பலி
லாரி மோதி கல்லூரி மாணவன் பலியானான்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் மல்லூர் மூக்குத்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல். இவருடைய மகன் சூர்யா (வயது 22). சேலம் அருகே தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சூர்யா ஓமலூரில் உள்ள தன்னுடைய நண்பரின் வீட்டு புதுமனை புகுவிழாவுக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மல்லூர் செல்ல ஓமலூர் சரபங்கா ஆற்று பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த டிப்பர் லாரி, சூர்யா சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக தெரிகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட சூர்யா படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் சூர்யாவை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சூர்யா பரிதாபமாக இறந்தார்.
சூர்யா உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான சூர்யா உடலை பார்த்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.