பர்கூரில் மொபட் மீது லாரி மோதி கோர விபத்து: தாய்-மகன் உள்பட 3 பேர் பலி-ரேஷன்கடையில் பொருட்கள் வாங்கி திரும்பிய போது பரிதாபம்


தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 10:53 PM IST)
t-max-icont-min-icon

பர்கூரில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டு்க்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் தாய்- மகன் உள்பட 3 பேர் பலியானார்கள்.

கிருஷ்ணகிரி

பர்கூர்:

விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55), தொழிலாளி. இவர் பர்கூரில் ஜெகதேவி சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள ரேஷன் கடையில் நேற்று பிற்பகல் பொருட்கள் வாங்குவதற்காக மொபட்டில் வந்தார்.

அவர் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். வழியில் பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி சரசு (28), அவருடைய மகன் தமிழ்செல்வன் (8) ஆகியோர் ரேஷன் பொருட்களுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அவர்களை பார்த்த சீனிவாசன், மொபட்டை நிறுத்தி தாய்-மகன் 2 பேரையும் தனது மொபட்டில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து வீ்ட்டுக்கு புறப்பட்டார்.

3 பேரும் பலி

மதியம் 2.30 மணி அளவில் ஜெகதேவி சாலையில் அவர்கள் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பர்கூரில் இருந்து கொண்டப்பநாயனப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

சோகம்

அவர்கள் விபத்தில் பலியான சரசு, அவருடைய மகன் தமிழ்செல்வன் மற்றும் சீனிவாசன் ஆகிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான சிறுவன் தமிழ்செல்வன் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

லிப்ட் கொடுத்த தொழிலாளி

ரேஷன் பொருட்கள் வாங்கி கொண்டு மொபட்டில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த தொழிலாளி சீனிவாசன், வழியில் தாய்-மகன் ரேஷன் பொருட்களுடன் நடந்து சென்றதை கண்டு மொபட்டை நிறுத்தி கரிசனத்துடன் விசாரித்துள்ளார். அடிக்கிற வெயிலில் இவ்வாறு நடந்து செல்கிறீர்களே நானும் வீட்டுக்கு தான் போகிறேன், ரேஷன் பொருட்களை எனது மொபட்டின் முன்னால் வைத்து விட்டு ஏறுங்கள் என்று தாய்-மகன் இருவரையும் அவர் லிப்ட் கொடுத்து ஏற்றிச்சென்றதை அந்த பகுதியில் நின்றவர்கள் பார்த்துள்ளனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில்தான் சீனிவாசன் வீடு அமைந்துள்ளது. வீட்டின் மிக அருகே வந்த நிலையில் கணநேரத்தில் விபத்தில் சிக்கி அவர்கள் 3 பேரும் பலியான சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story