மினி வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம்


மினி வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம்
x

குஜிலியம்பாறை அருகே மினி வேன், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

கரூர் மாவட்டம் நல்லூரான்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 37). இவருடைய மனைவி வீரம்மாள் (30). இவர்களுக்கு பிரணவ் (5) என்ற மகனும், சபர்ணா (1) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று பிரபாகரன் தனது மனைவி, குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் தான்தோன்றிமலைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டார். குஜிலியம்பாறையை அடுத்த கோவில்பட்டி பகுதியில் அவர்கள் வந்தபோது, முசிறியில் இருந்து பள்ளபட்டி நோக்கி வந்த மின் வேன் பிரபாகரனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மினி வேனுக்கு அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கி கொண்டது.

மேலும் மோட்டார் சைக்கிளை இழுத்து சென்றபடி அருகில் இருந்த பள்ளத்துக்குள் வேன் பாய்ந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரபாகரன், அவருடைய மனைவி, 2 குழந்தைகள், மினி வேனை ஓட்டி வந்த சாதிக் பாட்சா, அவருடைய மனைவி மும்தாஜ் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 6 பேரையும் மீட்டு குஜிலியம்பாறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story