தனியார் பஸ் மீது லாரி மோதியது: தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் 16 பேருக்கு சிகிச்சை-தி.மு.க. மாவட்ட செயலாளர் நேரில் ஆறுதல்
தர்மபுரி:
நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூரை அடுத்த ஈச்சம்பள்ளத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரு தனியார் பஸ்சில் மேல்மலையனூர் சென்று அங்குள்ள அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற அமாவாசை சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர். பின்னர் சொந்த ஊருக்கு திரும்பும் போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே எதிரே வந்த லாரி, தனியார் பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 45 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 16 பேர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களிடம் அவர் வலியுறுத்தினார். அப்போது நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் பொன்மகேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.