தடுப்பு சுவரில் வெங்காய பார லாரி மோதியது-தொப்பூர் கணவாயில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் சாலையோர தடுப்பு சுவரில் மோதி வெங்காய பார லாரி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
வெங்காய லாரி
மராட்டிய மாநிலம் சோளாப்பூரில் இருந்து வெங்காய பாரம் ஏற்றி கொண்டு ஈரோடு மாவட்டத்திற்கு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை சோளாப்பூரை சேர்ந்த சச்சின்கோர் (வயது 19) ஓட்டி சென்றார். அதே பகுதியை சேர்ந்த நிர்தோஷ் (19) கிளீனராக உடன் வந்தார். இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் நேற்று சென்று கொண்டிருந்தது.
தொப்பூர் கணவாய் முதல் வளைவை கடந்த போது, லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடி, சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சச்சின்கோர், நிர்தோஷ் படுகாயம் அடைந்தனர். மேலும் தர்மபுரி-சேலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
விபத்து குறித்த்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் சிக்கி தவித்த டிரைவர், கிளீனரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் மீட்பு குழுவினர் உதவியுடன் லாரி அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.