ஓமலூர் அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி சாவு
ஓமலூர் அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அப்போது போலீஸ் நிலைய எல்லை குளறுபடியால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்:
கட்டிட தொழிலாளி
ஓமலூரை அடுத்த செல்லப்பிள்ளை குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராக்கியண்ணன் (வயது 35), கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற இவர் இரவு வீடு திரும்பவில்லை.
நேற்று காலையில் பெரியப்பட்டி அருகே சாலையோரம் உள்ள பள்ளத்தில் ராக்கியண்ணன் இறந்து கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
முற்றுகை
தகவல் அறிந்த ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, ஓமலூர் மற்றும் தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியான ராக்கியண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ராக்கியண்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் ஓமலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
எல்லை அளவீடு
இதற்கிடையே ராக்கியண்ணன் இறந்து கிடந்த இடம் தீவட்டிப்பட்டி போலீஸ் எல்லையில் வருகிறதா? அல்லது ஓமலூர் போலீஸ் நிலைய எல்லையில் வருகிறதா? என்ற குளறுபடி ஏற்பட்டது. உடனே வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் விபத்து நடந்த இடத்தை அளவீடு செய்தனர். அதன்பிறகு அது தீவட்டிப்பட்டி போலீஸ் எல்லை என்பது தெரிய வந்தது. விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தினர்.