சேலத்தில் ரெயிலில் அடிபட்டு கழுத்து துண்டாகி வாலிபர் பலி
சேலத்தில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் கழுத்து துண்டாகி பலியானார்.
ரெயிலில் அடிபட்டு...
நாகர்கோவிலில் இருந்து கச்சிக்குடாவுக்கு செல்லும் ரெயில் நேற்று இரவு சேலம் வந்தது. இந்த ரெயில் இரவு 8.30 மணியளவில் சேலம்-மல்லூர் வழித்தடத்தில் கொண்டாலம்பட்டி போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள தண்டவாளத்தில் சென்றது.
அப்போது அந்த ரெயிலில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அடிபட்டு இறந்து விட்டதை அந்த ரெயில் ஓட்டுனர் பார்த்தார். உடனே சேலம் ரெயில் நிலைய அதிகாரி அனுராக்குமார் சுக்லாவுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சேலம் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆர்.வெங்கடாசலம், ஏட்டு ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கழுத்து துண்டாகி பலி
அங்கு ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் என தெரியவந்தது. ரெயிலில் அடிபட்டதில் அந்த வாலிபர் 2 கால்கள் உடைந்த நிலையிலும், வலது கை முழுவதும் சிதைந்த நிலையிலும், இடது கை முன்பக்கம் உடைந்த நிலையிலும், கழுத்து துண்டாகி சிதைந்த நிலையிலும் பிணமாக கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அடையாளம் தெரியாத அந்த வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர், சம்பவ இடத்தில் ரெயில் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.