சாலையில் கவிழ்ந்த ஆட்டோ மீது அரசு பஸ் மோதியது: தனியார் நிறுவன மேலாளர் பலி-மலேசியாவில் இருந்து உறவினர்களை பார்க்க வந்தபோது சோகம்


சாலையில் கவிழ்ந்த ஆட்டோ மீது அரசு பஸ் மோதியது: தனியார் நிறுவன மேலாளர் பலி-மலேசியாவில் இருந்து உறவினர்களை பார்க்க வந்தபோது சோகம்
x

மல்லூர் அருகே சாலையில் கவிழ்ந்த ஆட்டோ மீது அரசு பஸ் மோதியதில் தனியார் நிறுவன மேலாளர் பலியானார். மலேசியாவில் இருந்து உறவினர்களை பார்க்க வந்தபோது இந்த சோகம் ஏற்பட்டது.

சேலம்

பனமரத்துப்பட்டி:

தனியார் நிறுவன மேலாளர்

நாமக்கல் மாவட்டம் வையப்பமலையை சேர்ந்தவர் குமரவேல் (வயது 42). இவர் கடந்த 25 ஆண்டுகளாக மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் ஜேலான் தெண்டல் பேர்ம் பகுதியில் தங்கி இருந்து, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ராஜேஸ்வரி (40) என்ற மனைவியும், தீபன் (21) என்ற மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் குமரவேல், வையப்பமலையில் உள்ள தனது உறவினர்களை சந்திப்பதற்காக மனைவி, மகனுடன் சேலம் வந்தார். நேற்று அதிகாலை அவர்கள் 3 பேரும் ஆட்டோ மூலம் வையப்பமலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை சேலத்தை சேர்ந்த ஈஸ்வரன் ஓட்டி சென்றார்.

ஆட்டோ கவிழ்ந்தது

மல்லூர் அருகே உள்ள நிலவாரப்பட்டி பெட்ரோல் பங்க் பகுதியில் 5.30 மணிக்கு ஆட்டோ சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடி, தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் குமரவேல், ராஜேஸ்வரி, தீபன், ஈஸ்வரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமரவேல் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

விபத்து குறித்து அறிந்த குமரவேல் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் குமரவேல் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உறவினர்களை பார்க்க மலேசியாவில் இருந்து சேலம் வந்த தனியார் நிறுவன மேலாளர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story