கோபி அருகே வேன் கவிழ்ந்து 8 தொழிலாளர்கள் படுகாயம்
கோபி அருகே வேன் கவிழ்ந்து 8 தொழிலாளர்கள் படுகாயம்
கடத்தூர்
சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூரில் தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு பகுதியில் இருந்து வந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் அனைவரும் வேன் மூலமாக அழைத்து வரப்பட்டு மீண்டும் பணி முடிந்த பிறகு அதே வேனில் வீட்டுக்கு அழைத்து செல்லப்படுவது வழக்கம்.
அதேபோல் நேற்று காலை தொழிலாளர்கள் வேனில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அரசூர் அருகே உள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்த பண்ணாரி என்பவர் மகன் அழகிரி (வயது 28) வேனை ஓட்டிச்சென்றார். வேன் குருமந்தூர் அருகே உள்ள சுட்டிக்கல்மேடு என்ற இடத்தில் சென்றபோது சாலையோரத்தில் கொட்டி வைக்கப்பட்டு இருந்த ஜல்லி கற்கள் மீது ஏறியது.
இதில் நிலைதடுமாறிய வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி வேனில் இருந்த தொழிலாளர்களான கோபி அருகே உள்ள நாயக்கன்காட்டை சேர்ந்த தங்கவேல் மகன் பொன்.சேனாதிபதி (35), வெட்டையம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி நதியா (28), புது அய்யம்பாளையம் பொலவபாளையத்தை சேர்ந்த பொங்கியண்ணன் மனைவி ரேணுகா (32), வேன் டிரைவர் அழகிரி உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் 8 பேரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.