தலைவாசல் அருகே கல்லூரி பஸ் மோதி பள்ளி ஆசிரியை பலி-உறவினர்கள் சாலைமறியலால் பரபரப்பு


தலைவாசல் அருகே கல்லூரி பஸ் மோதி பள்ளி ஆசிரியை பலி-உறவினர்கள் சாலைமறியலால் பரபரப்பு
x

தலைவாசல் அருகே கல்லூரி பஸ் மோதி பள்ளி ஆசிரியை பலியானார். உறவினர்கள் சாலைமறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

தலைவாசல்:

பள்ளி ஆசிரியை

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா சிறுப்பாக்கம் எஸ்.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சத்யபிரியா (வயது 28). இவர், அதே பகுதியில் தனியார் பள்ளயில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு ஆஸ்னவி (9) சன்மதி (1) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த 18-ந் தேதி சத்யபிரியா, தலைவாசலை அடுத்த வி.ராமநாதபுரம் கிராமத்திற்கு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு 2 மகளுடன் வந்துள்ளார். அதன் பின்னர் நேற்று காலை குழந்தைகளை விட்டு விட்டு பள்ளிக்கு செல்ல புளியங்குறிச்சி வழியாக சிறுப்பாகத்துக்கு மொபட் மூலம் சென்றார்.

கல்லூரி பஸ் மோதியது

தலைவாசல்- வீரகனூர் சாலையில் புளியங்குறிச்சி பிரிவு ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த கல்லூரி பஸ், சத்யபிரியா சென்ற மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேேய பலியானார்.

தகவல் அறிந்தவுடன் சத்யபிரியாவின் தந்தை மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சோகம்

ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், தலைவாசல் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் சத்யபிரியா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story