பரமத்தி அருகே தனியார் கல்லூரி பஸ்-கார் மோதல்-டிரைவர் பலி
பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே தனியார் கல்லூரி பஸ், கார் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.
கார் டிரைவர்
பரமத்தி அருகே உள்ள கூடச்சேரியை அடுத்த மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் பூபதிராஜா (வயது 33). கார் டிரைவர். இவர் நேற்று மாலை பரமத்தி அருகே உள்ள அர்த்தனாரிபாளையம் பகுதியில் காரை ஓட்டி சென்றார். அப்போது எதிரே திருச்செங்கோட்டில் இருந்து மாணவிகளை வீடுகளில் விடுவதற்காக தனியார் கல்லூரி பஸ் ஒன்று வந்தது.
திடீரென தனியார் கல்லூரி பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி, உருக்குலைந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் பூபதிராஜா படுகாயம் அடைந்தார்.
40 மாணவிகள்
இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள், இடிபாடுகளில் சிக்கி தவித்த பூபதிராஜாவை மீட்டு சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த 40 கல்லூரி மாணவிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கார், கல்லூரி பஸ்சை அப்புறப்படுத்தினர். பின்னர் பூபதிராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.