பர்கூர் மலைப்பாதையில் அடுத்தடுத்து கவிழ்ந்த 2 லாரிகள்; அதிர்ஷ்டவசமாக டிரைவர்கள் உயிர் தப்பினர்
பர்கூர் மலைப்பாதையில் அடுத்தடுத்து 2 லாரிகள் கவிழ்ந்தன. இந்த விபத்துகளில் டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அந்தியூர்
பர்கூர் மலைப்பாதையில் அடுத்தடுத்து 2 லாரிகள் கவிழ்ந்தன. இந்த விபத்துகளில் டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சிமெண்டு பார லாரி
சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து அந்தியூர் வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு சிமெண்டு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றுகொண்டு இருந்தது. பர்கூர் மலைப்பாதையில் வேலம்பட்டி பிரிவு என்ற இடத்தில் சென்றபோது ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரமாக லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் குருசாமி என்பவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
போக்குவரத்து பாதிப்பு
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த குருசாமியை மீட்டு சிகிச்சைக்காக பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தார்.
அதன்பின்னர் வேறு ஒரு லாரி அங்கு வரவழைக்கப்பட்டு சிமெண்டு மூட்டைகள் ஏற்றி செல்லப்பட்டன. பிறகு மீட்பு வாகனம் மூலம் கவிழ்ந்த லாரி தூக்கி நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் பர்கூர் மலைப்பாதையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எச்சரிக்கை பலகை
இந்தநிலையில் சிறிது நேரம் கழித்து சிமெண்டு மூட்டை லாரி கவிழ்ந்த அதே இடத்தில் மைசூருவில் இருந்து அந்தியூருக்கு சோப்பு பாரம் ஏற்றி வந்த லாரியும் கவிழ்ந்தது. நல்லவேளையாக இந்த விபத்தில் டிரைவர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அடிக்கடி இதுபோல் விபத்து நடப்பதால் நெடுஞ்சாலைத்துறையினர் மலைப்பாதையின் வளைவு பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.