சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்


சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 30 Oct 2022 7:00 PM GMT (Updated: 30 Oct 2022 7:00 PM GMT)

திருவாரூரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

திருவாரூரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

திருவாரூர் நகர் மற்றும் தண்டலை, சேந்தமங்கலம் பகுதிகளில் உள்ள வீடுகளில் மாடுகள் வளர்க்கப்படுகிறது. இந்த மாடுகள் உரிய முறையில் பாரமரிப்புமின்றி வளர்க்கப்படாததால் திருவாரூர் பழைய பஸ்நிலையம், தேரோடும் 4 வீதிகள் போன்ற பிரதான சாலைகளில் எந்த நேரமும் சுற்றித்திரிகின்றன. சரியான உணவு, தீவனங்கள் கிடைக்காததால் சுவரில் ஒட்டப்படும் போஸ்டர்கள், சாலை ஒரங்களில் வீசப்படும் குப்பைகளில் உள்ள உணவு கழிவுகளை தின்று பசியை போக்கி வருகிறது.

காலை முதல் இரவு வரை உணவுக்காக சுற்றித்திரியும் மாடுகள், நள்ளிரவு நேரங்களில் மயிலாடுதுறை செல்லும் பிரதான சாலையான புதுத்தெரு, நாலுகால் மண்டபம், சேந்தமங்கலம், தண்டலை மன்னார்குடி செல்லும் சாலை மற்றும் துர்க்காலயா சாலை என அனைத்து பிரதான சாலைகளில் ஒய்யாரமாக படுத்தும், நின்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

விபத்தில் உயிரிழப்பு

இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் சாலைகளில் குறுக்கே படுத்தும், நிற்கும் மாடுகளால் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் விபத்துக்களில் படுகாயமடைந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தை தடுக்கும் வகையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் சாலைகளில் மாடுகளை விடுபவர்கள் மீது அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story