லெட்சுமாங்குடி சாலையில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து
லெட்சுமாங்குடி சாலையில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து
லெட்சுமாங்குடி சாலையில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்்க வாகன ஓட்டிகள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.
லெட்சுமாங்குடி சாலை
கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடி சாலை என்பது பிரதான போக்குவரத்து சாலை ஆகும். சென்னை, திருவாரூர், மன்னார்குடி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், கும்பகோணம், கொரடாச்சேரி, குடவாசல், திருத்துறைப்பூண்டி போன்ற மிகவும் முக்கியமான ஊர்களுக்கு இந்த சாலை வழியாக பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.
வாகன விபத்து
தினமும் லெட்சுமாங்குடி சாலையில் இரவு நேரங்களில் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இரவு நேரங்களில் சாலைகளில் மாடுகள் படுத்துக்கிடப்பதோ அல்லது நிற்போதோ எளிதில் தெரிவதில்லை. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. அந்த வழியாக ெசல்லும் வாகன ஓட்டிகள் ஏதேனும் விபரீதம் ஏற்படுமோ என அச்சப்படுகின்றனர். எனவே சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் மற்றும் குதிரைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உரிய நடவடிக்கை
இதுகுறித்து கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த நடராஜன் கூறுகையில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை முதலில் அதன் உரிமையாளர்கள் வீடுகளில் கட்டி வளர்க்க வேண்டும். அதை விடுத்து சாலைகளில் தினமும் சுற்றி திரிய விடுவதால் வாகன விபத்துகள் மற்றும் உயிர் பலி ஏற்படும் என்பதை உணர வேண்டும். அதுவும் இரவு நேரங்களில் கண்விழித்து வாகனங்களை ஓட்டிவரும் வாகன ஓட்டிகள், சாலையில் எங்கெல்லாம் மாடுகள் நிற்கிறது, படுத்துக்கிடக்கிறது என்று உடனடியாக பார்க்க இயலாத நிலை ஏற்படுகிறது. இதனால் மாடுகளை பார்த்து வாகனங்களை வளைத்து திருப்பி ஓட்டும் போது எதிரே வரும் வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுகிறது.
எனவே இரவு நேரங்களில் சாலையில் மாடுகள் சுற்றித்திரியும் வரை வாகன விபத்துகள் ஏற்படும் நிலை தான் ஏற்படும். அதனால் விபத்துகளை தவிர்க்க மாடுகள் வளர்ப்போர் சாலையில் விடாமல் வீட்டில் வளர்க்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.