மணல்கள் சாலையில் கொட்டுவதால் விபத்து
ஆற்காடு அடுத்த பிள்ளையார்குப்பம், பூட்டுத்தாக்கு பகுதிகளில் லாரிகளில் எடுத்து செல்லும்போது சாலையில் மணல் கொட்டுவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆற்காடு அடுத்த பிள்ளையார்குப்பம், பூட்டுத்தாக்கு பகுதிகளில் லாரிகளில் எடுத்து செல்லும்போது சாலையில் மணல் கொட்டுவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் கொட்டும் மணல்
வேலூர் மாவட்டம் அரும்பருதி பாலாற்றில் அரசு மூலம் மணல் டெண்டர் விடப்பட்டு பிள்ளையார் குப்பம் வழியாக ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு, அரப்பாக்கம் வழியாக லாரிகள் மூலம் மணல் ஏற்றிச் செல்லப்படுகிறது. இவ்வாறு ஏற்றி செல்லும்போது லாரிகளை சாலையின் ஓரம் நீண்ட தூரம் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
மேலும் தார்ப்பாய் கொண்டு மூடி எடுத்துச் செல்லப்படாததால் பிள்ளையார் குப்பம், பூட்டுத்தாக்கு, அரப்பாக்கம் ஆகிய பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் லாரியில் இருந்து மணல் கொட்டியபடி செல்கிறது. இவ்வாறு சாலைகளில் மணல் கொட்டுவதால் சாலை முழுவதும் மணல் பரவி அந்த வழியாக வரும் இரண்டு சக்கர வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துகள் ஏற்படுத்துகின்றன.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மணல் லாரிகள் தார்ப்பாய் கொண்டு மூடாமல் மணல் எடுத்துச் செல்வதால், லாரியின் பின்னால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது மணல் விழுந்து வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் அவ்வாறு சாலையில் கொட்டும் மணல்களை உடனடியாக அப்புறப்படுத்தினால் விபத்துக்களை தடுக்கலாம். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.