கிரேன் உள்பட 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
உளுந்தூர்பேட்டை அருகே கிரேன் உள்பட 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை:
விழுப்புரம் மாவட்டம் தழதாளி கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் மகன் செந்தில்குமார்(வயது 37). கிரேன் ஆபரேட்டர். இவர் நேற்று முன்தினம் காலை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மடப்பட்டில் இருந்து விழுப்புரம் நோக்கி கிரேனை ஓட்டிச்சென்றார். அப்போது பின்னால், கேரளாவில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கிரேன் மீது மோதியது. அடுத்த சில வினாடிகளில் பின்னால் மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பஸ், லாரி மீது மோதியது. இந்த விபத்தில் கிரேன் எந்திரத்தில் ஓட்டுநர் இருக்க கூடிய பகுதி மட்டும் தனியாக கழன்று கீழே விழுந்தது. 3 வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதால் மடப்பட்டு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி அறிந்ததும் திருநாவலூர் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.