மஞ்சூர்-கோவை சாலையில் விழுந்து கிடக்கும் கற்களால் விபத்து அபாயம்
தொடர் மழையால் மஞ்சூர்-கோவை சாலையில் விழுந்து கிடக்கும் கற்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்
ஊட்டி,
தொடர் மழையால் மஞ்சூர்-கோவை சாலையில் விழுந்து கிடக்கும் கற்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்
கோவை-மஞ்சூர் சாலை
நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு செல்ல குன்னூர்-பர்லியார் வழியாகவும், கோத்தகிரி வழியாகவும், மஞ்சூர்-கெத்தை வழியாகவும் 3 வழித்தடங்கள் உள்ளன. பருவமழை காலங்களில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஆங்காங்கே பாறைகள் உருண்டு விழுந்தும், மரங்கள் வேரோடு சாய்ந்தும் பேரிடர்கள் ஏற்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.
அந்த நேரங்களில் கோத்தகிரி வழியாக போக்குவரத்து திருப்பி விடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அவதியடைந்து வந்தனர். மேலும் பலத்த மழை பெய்யும்போது கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டால், கோவைக்கு செல்ல 3-வது மாற்றுப்பாதை இன்றியமையாதது. இதனால் கோவை-மஞ்சூர் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கற்களால் விபத்து அபாயம்
இந்தநிலையில் கடந்த மாதம் பெய்த கோடை மழையின் போது, சாலையில் கற்கள் விழுந்து கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது, எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட சிரமமாக உள்ளது. மேலும் சாலையோரம் கிடக்கும் கற்கள், பாறைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
மஞ்சூரில் இருந்து கெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு தினமும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சென்று வருகின்றன. 55 கிலோ மீட்டர் தூர சாலை 7 மீட்டராக அகலப்படுத்தப்பட்டதால், கோவைக்கு 2½ மணி நேரத்தில் செல்ல முடிகிறது. இதற்கிடையே தொடர் மழை காரணமாக மலையில் இருந்து கற்கள் உருண்டு சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்து கிடக்கிறது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடும் போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
அகற்ற வேண்டும்
மேலும் சாலையின் இருபுறங்களிலும் செடி, கொடிகள் வளர்ந்து, புதர்கள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. எனவே, சாலையில் உள்ள கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.