தேனி அருகே ஸ்கூட்டரில் சென்ற போது விபத்து:அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பாட்டி-பேத்தி பலி:குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறல்


தேனி அருகே ஸ்கூட்டரில் சென்ற போது விபத்து:அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பாட்டி-பேத்தி பலி:குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறல்
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே ஸ்கூட்டரில் சென்றபோது அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பாட்டி, பேத்தி பலியாகினர். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

தேனி

தோட்ட தொழிலாளர்கள்

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள முருக்கோடை கிராமத்தை சேர்ந்தவர் அமாவாசை. இவருடைய மனைவி ராணி (வயது 44). இவர், தனது குடும்பத்தோடு கேரள மாநிலம், மூணாறு அருகே பூப்பாறை பகுதியில் தங்கி, தோட்ட வேலை செய்து வந்தார். அவருடைய மகன் சத்தியராஜ், மகள் யோகனா குடும்பத்தினரும் பூப்பாறை பகுதியில் வசிக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணி மற்றும் அவருடைய மகன், மகள் குடும்பத்தினர் சொந்த ஊரான முருக்கோடைக்கு வந்தனர். நேற்று அவர்கள் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு ஸ்கூட்டரில் பூப்பாறைக்கு புறப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளை ராணியின் மருமகன் ஜெயப்பிரகாஷ் ஓட்டி வந்தார். அதில் அவருடைய மனைவி மற்றும் மகள் ருத்ராஸ்ரீ (4) மற்றும் உறவினரான ஜெகதீஸ்வரன் (15) ஆகியோர் சென்றனர். ஸ்கூட்டரில் ராணி, அவருடைய மருமகள் வானதி (25), வானதியின் மகன் உத்கேஸ்வரன் (7) ஆகியோர் சென்றனர். ஸ்கூட்டரை வானதி ஓட்டிச் சென்றார்.

பாட்டி-பேத்தி பலி

தேனி-போடி சாலையில் தீர்த்தத்தொட்டி அருகில் ஒரு கடையில் அவர்கள் நின்று டீ குடித்தனர். பின்னர், ருத்ராஸ்ரீ தனது பாட்டியுடன் ஸ்கூட்டரில் செல்வேன் என்று அடம் பிடித்தாள். அவருடைய பெற்றோர் சமாதானம் செய்ய முயன்றும் குழந்தை கேட்கவில்லை.

அடம் பிடித்த குழந்தையை, பாட்டி ராணி ஆசையாய் தூக்கி தனது மடியில் அமர வைத்துக் கொண்டார். இதையடுத்து ஸ்கூட்டரை வானதி ஓட்டத் தொடங்கினார். தோப்புப்பட்டி அருகே சாலையின் வளைவு பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது, பின்னால் பெரியகுளத்தில் இருந்து போடி நோக்கி அரசு பஸ் வந்தது.

அந்த பஸ் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் ஸ்கூட்டர் நிலைதடுமாறி சாலையில் சரிந்தது. அப்போது ராணி மற்றும் அவருடைய மடியில் அமர்ந்து இருந்த பேத்தி ருத்ராஸ்ரீ ஆகியோர் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினர். இதில் பஸ் சக்கரம் அவர்கள் இருவரின் மீதும் ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே பாட்டியும், பேத்தியும் உடல் நசுங்கி பலியானார்கள்.

பெற்றோர் கதறல்

வானதியும், உத்கேஸ்வரனும் படுகாயம் அடைந்தனர். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்த ஜெயப்பிரகாஷ் இதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோய் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அவரும், அவருடைய மனைவி யோகனாவும் ஓடி வந்து குழந்தை உள்ளிட்ட இருவரையும் தூக்க முயன்றனர். அப்போது அவர்கள் இருவரின் உடலிலும் உயிர் இல்லை. இதனை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். குழந்தையின் உடலை மடியில் வைத்துக் கொண்டு பெற்றோர் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது.

அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு பழனிசெட்டிபட்டி போலீசாரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பலியான இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பஸ் டிரைவரான தாமரைக்குளத்தை சேர்ந்த அய்யனசாமி (52) மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.


Next Story