பட்டாசு ஆலையில் விபத்துகளை தடுக்கலாம்


பட்டாசு ஆலையில் விபத்துகளை தடுக்கலாம்
x

விதிமுறைகளை பின்பற்றினால் பட்டாசு ஆலையில் விபத்துகளை தடுக்கலாம் என தொழிலாளர் நலன் கூடுதல் இயக்குனர் ரவிச்சந்திரன் கூறினார்.

விருதுநகர்

தாயில்பட்டி,

விதிமுறைகளை பின்பற்றினால் பட்டாசு ஆலையில் விபத்துகளை தடுக்கலாம் என தொழிலாளர் நலன் கூடுதல் இயக்குனர் ரவிச்சந்திரன் கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாத்தூர் தாலுகா படந்தால் அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் பட்டாசு தொழிலை விபத்து இல்லாமல் பாதுகாப்பாக செய்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பட்டாசு ஆலை உரிமையாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினாா். போர்மேன் சுப்புராம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பட்டாசு தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் கூடுதல் இயக்குனர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், தற்போது வெயில் காலமாக இருப்பதால் பட்டாசு தொழிலை பாதுகாப்பாக செய்ய வேண்டும்.

ஒரே நேரத்தில் ஒரு ஆலையில் மட்டுமே பணிபுரிய வேண்டும்.

கூடுதல் சம்பளம்

சிலர் கூடுதல் சம்பளத்திற்காக வேறு பட்டாசு ஆலைக்கு செல்கின்றனர். ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டாசு ஆலையில் பணிபுரிகின்றனர். இது மிகவும் தவறானதாகும். ஏனெனில் ஒவ்வொரு தொழிற்சாலைகளில் சூழ்நிலை வெவ்வேறாக இருக்கும். அவ்வாறு இருக்கும்போது பட்டாசு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

பட்டாசு உற்பத்தி நடைபெறும் இடத்தில் தண்ணீர் சம்பந்தமான பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. குடும்ப பிரச்சினையுடன் வரும் தொழிலாளர்களை பட்டாசு உற்பத்திக்கு அனுமதிக்காமல் அவர்களை வீட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். தொழிலாளர்கள் பட்டாசு விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றினால் பட்டாசு ஆலையில் விபத்துகளை தடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பட்டாசு தொழிலாளர்களிடம் பட்டாசுகளை செய்வதற்கு எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள் என்பது குறித்தும், உற்பத்தி செய்வது குறித்த சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.


Next Story