அதிக அளவில் கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகளால் தொடரும் விபத்துகள்


அதிக அளவில் கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகளால் தொடரும் விபத்துகள்
x

அனுமதியை மீறி செயல்படும் கல்குவாரிகளில் இருந்து அதிக அளவில் கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகளால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

கரூர்

கல்குவாரிகள்

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம், உப்புப்பாளையம், பசுபதிபாளையம், நடுப்பாளையம், குப்பம், காருடையபாளையம், தென்னிலை, பரமத்தி, புன்னம் ஊராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் பொடி ஜல்லி, ¼ இன்ச் ஜல்லி, ½ இன்ச் ஜல்லி, ¾ இன்ச் ஜல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான ஜல்லி ரகங்கள், சம்மட்டி கற்கள் மற்றும் செயற்கை மணல்கள் தயார் செய்கின்றனர்.

தயார் செய்யப்பட்ட ஜல்லி கற்கள், செயற்கை மணல்களை ஈரோடு, கோவை, கரூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கும்பகோணம், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். பரமத்தி ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு கல்குவாரிகளில் அரசு அனுமதி அளித்ததற்கு மேல் குழி தோண்டப்பட்டு கற்கள் வெட்டப்பட்டு வருகிறது.

அளவுக்கு அதிகமாக...

பல கல்குவாரிகள் அரசு அனுமதி அளித்திருந்த காலம் முடிந்தும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சில கல்குவாரிகளில் அனுமதி பெறாமல் வெட்டப்பட்டு வருகிறது. சாலை ஓரத்தில் உள்ள கல்குவாரி பகுதி வழியாக வாகனங்கள் செல்லும்போது நிலை தடுமாறி அளவுக்கு அதிகமாக ஆழத்தில் உள்ள கல்குவாரிகளில் வாகனங்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

இது தொடர் கதையாக உள்ளது. அளவுக்கு அதிகமாக வெட்டப்பட்டுள்ள கல்குவாரிகளில் இருந்து கற்களை லாரியில் ஏற்றி மேலே கொண்டு வரும்போது கல்குவாரியில் இருக்கும் பெரிய பெரிய பாறைகள் உருண்டு விழுந்து பொருட் சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் கல்குவாரிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெடிவைத்து தகர்க்கப்படுவதாகவும், அதிக அதிர்வு கொண்ட வெடி வெடிப்பதால் அருகாமையில் உள்ள குடியிருப்பு வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் தூக்கமின்மையும் ஏற்படுகிறது.

சுற்றுச்சூழல் மாசு

கற்களை கொண்டு சென்று பல்வேறு ரகமான ஜல்லிகள் தயாரிக்கும் போது அங்கிருந்து ஏராளமான கற்களின்துகள் பறந்து சென்று விழுகிறது. இதனால் அந்த சாலை வழியாக யாரும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் மாசு ஏற்பட்டு பொதுமக்கள் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் விவசாயத்தோட்டங்களில் உள்ள பயிர்கள் முழுவதும் மண்களால் மூடி உள்ளது. வீட்டு சுவர்களிலும் மண்கள் படிந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

சமூக ஆர்வலர் சுப்பிரமணியன்:- குப்பம், புன்னம்சத்திரம், பரமத்தி, தென்னிலை மற்றும் பல்வேறு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது பல கல்குவாரிகள் போதிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் ஆழமாக கல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதை வரைபடம் மூலம் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளோம். இவற்றை அதிகாரிகள் பின்பற்றுவது கிடையாது. இப்பகுதி முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் கல்குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்வாகம் ஆய்வு செய்யாமல் பாதிப்புகளை வேடிக்கை பார்த்து வருகிறது.

வாகனங்கள் மீது விழுந்து விபத்து

மரவாபாளையம் குணசேகரன்:- அரசின் அனுமதி பெற்று செயல்படும் கல்குவாரிகளில் அதிக ஆழத்தில் அதிக கற்களை வெட்டி எடுக்கின்றனர். பல லாரிகளில் உரிய அனுமதி இல்லாமல் கற்களை எடுத்துச் செல்கின்றனர். அதை அதிகாரிகள் கண்டு கொள்லாமல் மெத்தனம் காட்டுகிறார்கள். எனவே சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து கல்குவாரிகளிலும் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயி முருகேசன்:- கல்குவாரியில் இருந்து லாரிகளில் அதிக கற்களையும், அதிக ஜல்லிகளையும், லாரியின் மட்டத்திற்கு மேல் செயற்கை மணல்களையும் ஏற்றிக்கொண்டு லாரிகள் அதிவேகத்தில் செல்கின்றன. அப்போது லாரிகள் மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும்போது மட்டத்துக்கு மேல் உள்ள ஜல்லிகளும், கற்களும் மேலே இருந்து கீழே விழுகிறது. அப்போது லாரிகளுக்கு பின்னால் செல்லும் வாகனங்கள் மீது விழுந்து விபத்து ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் மீது விழுந்தும் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அதிக கற்களை ஏற்றிக்கொண்டும், செயற்கை மணல்களை அதிகமாக ஏற்றி செல்லும் லாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோம்புப்பாளையம் பகுதியை சேர்ந்த சித்தார்த்தன்:- குப்பம், புன்னம்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜல்லிகளையும், கற்களையும் இரவு பகல் பாராமல் ஏற்றிக்கொண்டு லாரிகள் வேகமாக செல்கின்றன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் உரிய அனுமதி இல்லாமல் பல லாரிகள் செல்கின்றன. அதேபோல் நொய்யல்-பரமத்தி செல்லும் வழியில் குப்பம் பகுதியில் கல்லில் இருந்து செயற்கை மணல் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதில் இருந்து வரும் மாசு காரணமாக அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும்போது நாம் அணிந்து இருக்கும் உடைகள் அனைத்தும் பாழாகி வருகிறது.அந்த பகுதியில் உள்ள பயிர்கள் அனைத்தும் மண்களாகவே உள்ளது. வீடுகளிலும் மண்கள் படிந்துள்ளது. காருடையாம்பாளையம் பகுதியில் இருந்து வரும் லாரிகளால் மாசு ஏற்பட்டுள்ளது. எனவே கனிமவளத்துறை அதிகாரிகள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story