பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் தொடரும் விபத்துகள்
பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் தொடரும் விபத்துகளை தடுக்க போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலும், உலக புகழ்பெற்ற ஆன்மிக தலமான பழனியும் உள்ளது. இந்த இருபெரும் தலங்களை இணைக்கும் வகையில் பழனி-கொடைக்கானல் மலைப்பாதை விளங்குகிறது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பழனிக்கும், பழனி வரும் பக்தர்கள் கொடைக்கானலுக்கும் செல்ல முக்கிய வழிப்பாதையாக பழனி-கொடைக்கானல் மலைப்பாதை உள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் கோவை, திருப்பூர் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் செல்ல பழனி மலைப்பாதையை பிரதானமாக பயன்படுத்தி செல்கின்றனர். அதேபோல் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்ததும் இந்த மலைப்பாதை வழியே கொடைக்கானலுக்கு சென்று வருகின்றனர். இதுதவிர இந்த மலைப்பாதையில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதனால் இந்த மலைப்பாதையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும்.
மலைப்பாதை பயணம்
பழனி-கொடைக்கானல் மலைப்பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. பழனியில் இருந்து தேக்கந்தோட்டம் வரை 11 கிலோமீட்டர் சாலையும், அதை கடந்த பின்பு மலைப்பாதையும் தொடங்குகிறது. மலைப்பாதை பயணம் என்றாலே இருபுறமும் பச்சை பசேலென மரம், செடி-கொடிகள், ஆங்காங்கே பாறையில் இருந்து வழிந்தோடும் நீர்வீழ்ச்சிகள் என விழி மயக்கும் பசுமை காட்சியாக பழனி-கொடைக்கானல் மலைப்பாதை உள்ளது. ஆனால் விழி மயங்கினால் திக்திக் பயணமாக மாறி விபத்தும் காத்திருக்கிறது.
மலைப்பாதை பயணத்தின்போது அதிக கவனம் தேவை. சிறிது கவனம் சிதறினாலும் பெரும் விபத்து நேரக்கூடிய சூழல் உருவாகும். எனவேதான் விபத்தை தடுப்பதற்காக மலைப்பாதையில் ஆபத்தான வளைவுகளில் குவிலென்ஸ், விபத்து பகுதி, வேக தன்மை, ஒலி எழுப்பக்கூடிய பகுதி என பல்வேறு அறிவிப்பு பலகைகள் மலைப்பாதை ஓரங்களில் வைக்கப்பட்டு இருக்கும். இவற்றை முறையாக பின்பற்றி சென்றால் விபத்தை முற்றிலும் தவிர்க்கலாம்.
தொடர் விபத்துகள்
ஆனால் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் குவிலென்சுகள், எதிரொளிப்பான்கள், விபத்து அறிவிப்பு பலகை இல்லாததாலும், ஆங்காங்கே தடுப்புச்சுவர் சேதமடைந்ததாலும் அடிக்கடி விபத்துகள் அரங்கேறி வருகிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தஞ்சாவூரை சேர்ந்த பெண் ஒருவர் இறந்துவிட்டார். 21 பேர் காயம் அடைந்தனர். இதுபோல் உயிர் சேதம் இன்றி பல விபத்துகள் நடந்துள்ளன.
இந்த விபத்துகளுக்கான காரணம் வாகனத்தின் அதிவேகம் ஒருபுறம் என்றால், விபத்து நிகழ்வதற்கான சூழல்கள் அமைந்துள்ளது மற்றொரு முக்கிய காரணிகளாக இருக்கிறது. சாலையோரம் காணப்படும் புதர்கள், குறைந்த உயரம் மற்றும் சேதமடைந்த தடுப்புச்சுவர் ஆகியவை விபத்து நடைபெற முக்கிய காரணமாகின்றன. எனவே பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் தொடரும் விபத்துகளை தடுக்க போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் சிலர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
குவிலென்ஸ்கள்
ராஜா (ஆம்புலன்ஸ் டிரைவர், பழனி):- பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் ஆபத்தான வளைவுகள், கொண்டைஊசி வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதற்கு வைக்கப்படும் குவிலென்சுகள் இல்லை. இதனால் கொண்டைஊசி வளைவில் ஒரேநேரத்தில் கனரக வாகனங்கள் வந்தால் திரும்பி செல்வதில் சிக்கல் உள்ளது. பழனி-தேக்கந்தோட்டம் சாலையில் உள்ள வளைவுகளில் வைக்கப்பட்ட குவிலென்சுகளும் உடைந்த நிலையில் உள்ளது. இதனால் சாலை விபத்துகள் அதிகம் நடக்கிறது. எனவே சாலை, மலைப்பாதை ஆகியவற்றில் உள்ள வளைவுகளில் குவிலென்சுகள் வைக்க வேண்டும். மலைப்பாதையில் போதிய அறிவிப்பு பலகைகள், தடுப்புக்கம்பிகளில் எதிரொளிப்பான்கள் இல்லை. சாலை சீரமைக்கப்பட்ட இடங்களில் கட்டுமான கழிவுகள் சாலையோரம் குவிந்து கிடக்கிறது. இதனாலும் விபத்து ஏற்பட்டு வருகிறது. அதை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மது பிரியர்களால் விபத்து
மாரிமுத்து (சுற்றுலா வாகன டிரைவர், பழனி):- மழைக்காலத்தில் மலைப்பாதையில் அடிக்கடி மண் சரிவும், பாறை உருண்டு விழும் சம்பவமும் ஏற்படுகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோந்து செல்ல வேண்டும். மேலும் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையானது பல இடங்களில் திறந்தவெளி பாராக மாறி வருகிறது. மது பிரியர்கள் சாலையோரம் உள்ள தடுப்புசுவற்றில் அமர்ந்து மது அருந்துகின்றனர். பின்னர் பாட்டில்களை அங்கேயே வீசி விட்டு பயணிக்கின்றனர். மலைப்பாதையில் மது அருந்திவிட்டு செல்லும்போது விபத்துகள் நேரிட வாய்ப்புகள் உள்ளது. எனவே மலைப்பாதையில் உள்ள சோதனை சாவடிகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு செல்வதை தடுக்க சோதனை செய்வது போல் மது பாட்டில்கள் உள்ளனவா? என சோதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.