அரசு பஸ் மீது சரக்கு வேன் மோதி விபத்து; டிரைவர் பலி
காங்கயம் அருகே அரசு பஸ் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் வேன் டிரைவர் உயிரிழந்தார், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பஸ்-வேன் மோதல்
கரூரில் இருந்து நேற்று காலை அரசு பஸ் ஒன்று கோவை நோக்கி காங்கயம் வழியாக வந்து கொண்டிருந்தது. பஸ்ஸை கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த டிரைவர் சரவணபவன் (வயது 57) என்பவர் ஒட்டி வந்தார். இதேபோல் பல்லடத்தில் இருந்து கரூர் நோக்கி சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேனை பல்லடம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (35) என்பவர் ஓட்டிச்சென்றார்.
இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் காங்கயம்- கரூர் சாலை, வீரணம்பாளையம் பிரிவு அருகே அரசு பஸ் வந்தபோது, எதிரே வந்த லாரியை முந்திக்கொண்டு வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
அப்போது வேனுக்கு பின்னால் வந்த காரும் வேனின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் மற்றும் அரசு பஸ்ஸின் முன் பகுதிகள் ேசதமடைந்தன.
டிரைவர் பலி
இந்த விபத்தில் வேன் டிரைவர் விக்னேசுக்கு இடது கால் துண்டானது. அரசு பஸ் டிரைவர் சரவணபவன் உள்பட பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் 4 பேருக்கு படுகாயங்களும், 20-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருப்பூர், ஈரோடு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட டிரைவர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
போக்குவரத்து பாதிப்பு
விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறங்களிலும் வரிஅரசு பஸ் மீது சரக்கு வேன் மோதி விபத்து; டிரைவர் பலிசையாக நிறுத்தப்பட்டது. அங்கு வந்த காங்கயம் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
காங்கயம் அருகே அரசு பஸ் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தால் காங்கயம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.