புதிய சட்டத்தின் படி போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்; ஈரோட்டில் தலைக்கவசம் அணியாத 110 பேரிடம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வசூல்


புதிய சட்டத்தின் படி  போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்;  ஈரோட்டில் தலைக்கவசம் அணியாத 110 பேரிடம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வசூல்
x

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோட்டில் தலைக்கவசம் அணியாத 110 பேரிடம் இருந்து முதல் நாளில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஈரோடு

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோட்டில் தலைக்கவசம் அணியாத 110 பேரிடம் இருந்து முதல் நாளில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

புதிய சட்டம்

நாடு முழுவதும் வாகன போக்குவரத்து சட்டத்தில் புதிய திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. இந்த சட்டம் தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

வாகன பெருக்கம், போக்குவரத்து விதி மீறல் ஆகியவற்றால் விபத்துகள் அதிகரிப்பதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. புதிய வாகன சட்டத்தின் படி இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000-ம், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், போக்குவரத்து சிக்னல்களை மீறினால் ரூ.500, பர்மிட் இல்லாத வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம், 14 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.1,000-ம், தகுதியற்ற நபர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம், நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தினால் ரூ.1,500 என்பது உள்பட 44 விதமான விதிமுறை மீறல்களுக்கு அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. அபராத தொகையை குறைப்பது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில் போலீசார் நேற்று முன்தினம் முதல் தீவிர வாகன தணிக்கையை தொடங்கி உள்ளனர்.

110 பேருக்கு அபராதம்

ஈரோடு மாவட்டத்திலும் நேற்று முன்தினம் முதல் நாள் என்பதால் பெரும்பாலான போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு பணியுடன், அபராதம் விதிக்கும் பணியிலும் ஈடுபட்டனர். முதல் நாளில் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் சென்றவர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசார் நடத்திய வாகன சோதனையில் முதல் நாளில் 110 பேர் தலைக்கவசம் அணியாமல் வந்ததால் அவர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

2-வது நாள்

நேற்று 2-வது நாளாக ஈரோடு மாநகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி காமராஜர் சிலை ரவுண்டானா, காளைமாட்டு சிலை சந்திப்பு, சுவஸ்திக் கார்னர், சத்தி ரோடு, கருங்கல்பாளையம், மூலப்பாளையம், கலெக்டர் அலுவலகம், பன்னீர்செல்வம் பூங்கா, சூரம்பட்டி நால்ரோடு உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்று வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.


Next Story