லாட்ஜில் தனியார் நிறுவன கணக்காளர் தூக்குப்போட்டு தற்கொலை
மனைவிக்கு இ-மெயிலில் தகவல் அனுப்பி விட்டு லாட்ஜில் தனியார் நிறுவன கணக்காளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குழித்துறை,
மனைவிக்கு இ-மெயிலில் தகவல் அனுப்பி விட்டு லாட்ஜில் தனியார் நிறுவன கணக்காளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் நிறுவன கணக்காளர்
அருமனை அருகே பத்துகாணி நிரப்பு ரோட்டை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 50). இவருடைய மனைவி நளினா (45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
ஹரிகரன் வெளிநாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். பின்னர் ஊருக்கு வந்த அவர் உடல்நிலை சரியில்லாததால் சில ஆண்டுகள் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். பின்னர் கடந்த ஓராண்டாக தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வந்தார்.
ஹரிகரனின் மனைவி நளினா மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அவர்களது பிள்ளைகள் மதுரை, சென்னையில் படித்து வருகின்றனர்.
வாடகை வீடு பிரச்சினை
ஹரிகரனுக்கு பத்துகாணி நிரப்பு ரோட்டில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை வாடகைக்கு கொடுத்து விட்டு அவர் குழித்துறை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அங்கிருந்து அவர் பணியை கவனித்து வந்துள்ளார்.
மேலும் பத்துகாணி நிரப்புரோட்டில் உள்ள ஹரிகரன் வீட்டில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும், ஆணும் வாடகைக்கு குடியிருந்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் வீட்டை காலி செய்யும்படி அவர் பலமுறை கூறியுள்ளார். ஆனால் அவர் காலி செய்யவில்லை. இதுகுறித்து போலீசாருக்கும், கலெக்டருக்கும் ஹரிகரன் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் 21-ந் தேதி இரவு ஹரிகரனின் மனைவி நளினா மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தான் மதுரையில் இருந்து பேசுவதாகவும், தனது கணவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தற்கொலை செய்யப்போவதாக தனக்கு இ-மெயில் அனுப்பி உள்ளதாகவும், அவரை காப்பாற்றும்படியும் கூறினார். மேலும் அவர் ஒரு குறிப்பிட்ட லாட்ஜின் பெயரையும் தெரிவித்தார்.
உடனே மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஹரிகரன் தங்கியிருந்த அறையை திறந்து பார்த்தனர். அப்போது அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
மேலும், இதுபற்றி மதுரையில் உள்ள நளினாவிற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதைக்கேட்டு துடிதுடித்து போன அவர் கதறி அழுதார். பிறகு அவர் குமரி மாவட்டத்துக்கு புறப்பட்டார்.
இதற்கிடையே போலீசார் ஹரிகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவிக்கு இ-மெயிலில் தகவல் அனுப்பி விட்டு தனியார் நிறுவன கணக்காளர் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.