குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள்
குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.
கூடலூர்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ரம்ஜானையொட்டி நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சுற்றுலா சென்று வந்தனர். இதனால் மலப்புரம் மாவட்டத்தின் எல்லையான வழிகடவு தொடங்கி கூடலூர், ஊட்டி பிங்கர்போஸ்ட் வரை சாரை சாரையாக சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து சென்றது.
இதேபோல் ஊட்டியில் இருந்து கூடலூருக்கு சுற்றுலா வாகனங்கள் வந்தன. கூடலூர் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சாலையோரங்களில் சுற்றுலா பயணிகள் தடை செய்த பிளாஸ்டிக் குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவு பொருட்களை வீசி சென்று உள்ளனர்.
கூடலூர், தேவர்சோலை, நாடுகாணி, நெலாக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும், ஊட்டி செல்லும் சாலையோரம் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுபொருட்கள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் அந்தந்த பகுதி தூய்மை பணியாளர்கள் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து அலுவலர்கள் கூறும்போது, நீலகிரியின் இயற்கை அழகை பாதுகாக்கும் வகையில் தடை விதிக்கப்பட்ட பொருட்களை சுற்றுலாப் பயணிகள் எடுத்து வரக்கூடாது. தொடர்ந்து இயற்கையை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.