மாற்றுத்திறனாளி குழந்தைக்கு தவறான சான்று வழங்கியதாக குற்றச்சாட்டு


மாற்றுத்திறனாளி குழந்தைக்கு தவறான சான்று வழங்கியதாக குற்றச்சாட்டு
x

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி குழந்தைக்கு தவறான சான்று வழங்கியதாக குறைதீர்வு கூட்டத்தில் குற்றம்சாட்டினர்.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் தனஞ்செயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:-

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என சிறப்பு முகாம்கள் நடத்தி அவர்களுக்கான அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்த முகாம்கள் முழுமையாக நடத்தப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கவேண்டிய வேலை, கூலி ஆகியவை ஊராட்சிகள் மூலம் கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே மூளை வளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முகாமில் டாக்டர்கள் சார்பில் மூளை வளர்ச்சி குன்றியவர் என தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சான்று புதுப்பிக்க சென்றோம். அங்கு அந்த குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை என்பதற்கு பதிலாக மனநலம் பாதித்தவர் என சான்று கொடுத்துள்ளனர். இதனால் அந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதற்கு அதிகாரிகள் கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான சான்று வழங்குவதில் மருத்துவத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டக்கூடாது. அரசு மருத்துவமனை தொடர்பாக நிறைய புகார்கள் வருகிறது. டாக்டராக இருந்தும் இவ்வாறு செயல்படுவது அதிர்ச்சியாக உள்ளது. சம்பந்தப்பட்ட டாக்டர் மீது புகார் கொடுத்தால் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிலுவை இன்றி உபகரணங்கள் வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மொபட்டுகள் வழங்கப்பட்டது.


Next Story