குற்றம் சாட்டப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்:வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் தர இயலாது- மதுரை ஐகோர்ட்டில் தகவல்


குற்றம் சாட்டப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்:வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் தர இயலாது- மதுரை ஐகோர்ட்டில் தகவல்
x

குற்றம் சாட்டப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அனைத்து வழக்கு ஆவணங்களையும் தர இயலாது என மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மதுரை


குற்றம் சாட்டப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அனைத்து வழக்கு ஆவணங்களையும் தர இயலாது என மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பற்களை பிடுங்கிய விவகாரம்

குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பற்களை அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர்சிங் என்பவர் பிடுங்கியதாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டவிரோத காவலில் போலீசார் வைத்து என்னை கடுமையாக தாக்கினார்கள். என்னுடைய 4 பற்கள் உடைக்கப்பட்டன. பிறகு என்னை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் என் மீது பதிவான வழக்கு விவரங்களை என்னிடம் வழங்கும்படி அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

உத்தரவு

இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி, எனது வழக்கு நிராகரிக்கப்பட்டது. எனவே அம்பாசமுத்திரம் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்து, என் மீது பதிவான குற்ற வழக்கின் அனைத்து விவரங்களையும் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் தொடர்பான வழக்கு விவரங்களை தாக்கல் செய்யும்படி, அம்பாசமுத்திரம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

மருத்துவ அறிக்கை

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, மனுதாரர் கூறியுள்ள ஆவணங்களில் முதல் தகவல் அறிக்கை, கைது ஆவண குறிப்பு, மாஜிஸ்திரேட் சிறையில் அடைக்க பிறப்பித்த ஆவண நகல் ஆகியவற்றையே தர இயலும். மனுதாரர் சம்பந்தப்பட்ட வழக்கின் அனைத்து ஆவணங்களையும் அவருக்கு தர, சட்டத்தில் இடம் இல்லை என்று தெரிவித்தார்.

அதற்கு மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மருத்துவ அறிக்கை உள்ளிட்ட தகவல்களையும் தருமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

இதனை தொடர்ந்து, இறுதி உத்தரவு பிறப்பிப்பதற்காக இந்த வழக்கை வருகிற 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


Related Tags :
Next Story