சதுரங்க போட்டியில் காரைக்குடி மாணவர் சாதனை
சதுரங்க போட்டியில் காரைக்குடி மாணவர் சாதனை படைத்தனர்.
காரைக்குடி
காரைக்குடி அருகே கோவிலூரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்-சாந்தி. இவர்களது மகன் மித்திலேஷ் ரஞ்சித்குமார் (வயது 11). இவர் குவைத் நாட்டில் உள்ள ஹல்ப் இந்தியன் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் சிறுவயது முதல் சதுரங்க போட்டியில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் அங்கு இந்திய மாணவர்களுக்காக நடைபெற்ற 11 வயதிற்குட்பட்ட சி.பி.எஸ்.இ. சதுரங்க போட்டியில் 5-க்கு 5 புள்ளிகளை பெற்று தேசிய அளவில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் குழுவாக கலந்துகொண்டு பள்ளிக்கு வெண்கல பதக்கமும், தனிநபர் பிரிவில் தங்க பதக்கமும் முதல் பரிசை பெற்று சாதனை படைத்தார். இதுதவிர உலகளவில் சிங்கப்பூர், தாய்லாந்து, குவைத் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்று பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். மேலும் இவர் கண்களை கட்டிக்கொண்டு சதுரங்க போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு சாதனைகளை படைத்த மாணவர் மித்திலேஷ்ரஞ்சித்குமாரை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.