தமிழக அரசின் சாதனைகளைதி.மு.க. மகளிரணியினர் வீடுகள் தோறும் கொண்டு சேர்க்க வேண்டும்:அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
தமிழக அரசின் சாதனைகளை தி.மு.க. மகளிரணியினர் வீடுகள் தோறும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சாதனைகளை தி.மு.க. மகளிரணியினர் வீடுகள் தோறும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிர் அணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி வடக்குமாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கி, புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து, அதற்கான படிவங்களை நிர்வாகிகளிடம் வழங்கி பேசினார்.
அப்போது, தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் படிப்புக்கும் மாணவிகலுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை இல்லந்தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 15-ந் தேதி முதல் கருணாநிதி மகளிர் உரிமைத்தொகை ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
உறுப்பினர் சேர்க்கையை...
ஏற்கனவே கருணாநிதி ஆட்சியின் போதுதான் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, உள்ளாட்சியில் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, தற்போது 50 சதவீதமாக அதிகரித்துவிட்டது. அனைத்து வகையிலும் பெண்கள் வாழ்வு உயரவேண்டும், பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி கருணாநிதி நூற்றாண்டு விழா வடக்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் மகளிர் அணியினரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். புதிய உறுப்பினர்கள் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைவர் கூறியப்படி வெற்றி பெற வேண்டும். அதற்கு தி.மு.க. மகளிர் அணியினர் முழுமையாக தமிழக அரசின் திட்டங்களையம் செய்த சாதனைகளையும் வீடுகள் தோறும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் மாநில மகளிர் அணி அமைப்பாளரும் முன்னாள் எம்.பியுமான ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் நாமக்கல் ராணி, துணை அமைப்பாளரும் மானாமதுரை எம்.எல்.ஏவுமான தமிழரசி, முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த்உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கால்நடை மருத்துவ முகாம்
ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலை பஞ்சாயத்து கக்கரம்பட்டி கிராமத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத் துறை, ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து கால்நடை மருந்துவ முகாமை நடத்தின. இம்முகாமிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ முன்னிலை வைத்தார். கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் சஞ்சீவிராஜ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் கீதாஜீவன் முகாமை தொடங்கி வைத்து பேசினார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் சிறந்த கால்நடை பராமரிப்போருக்கான மேலாண்மை விருதுகள் மற்றும் சிறந்த கிடேறி கன்றுகள் வளர்த்தோர்களுக்கான பரிசுகளை 8 நபர்களுக்கு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் எம்.செல்லப்பாண்டியன், ஓட்டப்பிடாரம் யூனியன் துணை தலைவர் காசிவிஸ்வநாதன், கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய், கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் விஜயஸ்ரீ, ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரமேஷ், குறுக்குச்சாலை பஞ்சாயத்து தலைவர் முனியம்மாள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.