விளைநிலங்கள் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்
ஸ்ரீ மதுரை ஊராட்சியில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
கூடலூர்,
ஸ்ரீ மதுரை ஊராட்சியில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
கலெக்டரிடம் மனு
கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில் தலைமையில் துணைத்தலைவர் ரெஜி மேத்யூ, அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், வியாபாரிகள் தோமஸ், சி.கே.மணி உள்பட பலர் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதுரதுல்லாவிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-
ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் 90 சதவீத மக்கள் 80 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் விவசாயம் செய்து வரும் நிலங்களில் வருவாய்த்துறையினர் அரசுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை வைத்து கையகப்படுத்தி வருகின்றனர். ஆனால், இப்பகுதி நிலம்பூர் கோவிலகத்துக்கு சொந்தமான இடம். 90 சதவீத மக்கள் அவர்களிடம் நேரடியாக விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதில் பல ஏக்கர் நிலங்களுக்கு அரசே நேரடியாக பட்டா வழங்கி உள்ளது. மீதி விவசாய நிலமாகவும், பிரிவு-53 வகையை சேர்ந்த நிலமாகவும் உள்ளது. இதில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிரிவு-17 நிலம் கிடையாது.
கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்
தற்போது அம்பலமூலாவில் 5.50 ஏக்கரும், நரி மூலாவில் 13 ஏக்கரும், மேல் சேமுண்டியில் 10 ஏக்கரும், அதன் அருகே 1 ஏக்கரும், மண் வயலில் 75 சென்ட் நிலங்களை கையகப்படுத்தி வருவாய்த்துறையினர் அரசுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர். இந்த நிலங்களில் தேயிலை, காபி, குறுமிளகு, வாழை, தென்னை, மா, பலா, பாக்கு உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ஊராட்சி பகுதியில் தொடர்ந்து நிலங்களை கையகப்படுத்தும் பணியில் வருவாய் துறையினர் கள ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே தனியார் வன பாதுகாப்பு சட்டம், வனவிலங்குகள் தொல்லை உள்பட பல்வேறு காரணங்களால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் விளைநிலங்களை கையகப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, விளைநிலங்கள் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.