லஞ்ச ஒழிப்பு அதிகாரி போன்று நடித்தவர், லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டரிடமே சிக்கினார்


லஞ்ச ஒழிப்பு அதிகாரி போன்று நடித்தவர், லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டரிடமே சிக்கினார்
x

மதுரையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த சென்னையை சேர்ந்தவர், லஞ்ச ஒழிப்பு பெண் இன்ஸ்பெக்டரிடம் சிக்கினார்.

மதுரை,

மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு (லஞ்ச ஒழிப்பு பிரிவு) இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சூரியகலா. இவர் தல்லாகுளம் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

நான் பணியில் இருந்தபோது சென்னை பழவந்தாங்கல் நேரு காலனியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 45) என்னை போனில் தொடர்பு கொண்டு, நானும் சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதாக பேசினார்.

மேலும் மதுரை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வேலை தொடர்பாக வந்துள்ளதால் உங்களை நேரில் பார்க்க வருகிறேன் என்று தெரிவித்தார். அலுவல் தொடர்பாக பார்க்க வருவதாக கூறியதால் நான் சரி என்று தெரிவித்தேன். அலுவலகத்திற்கு வந்த அவரிடம் பேச்சு கொடுப்பது போல் விசாரணை மேற்கொண்டேன். அப்போது, அவர் கூறியது பொய் என்பது தெரியவந்தது.

கைது

அவர் தனது உறவினர் ஒருவருக்கு வருவாய் சான்றிதழ் வாங்க பேரையூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அதிகாரி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் என்று அவரிடம் கூறியுள்ளார். அப்போது கிராம நிர்வாக அதிகாரி தன் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் ஒன்று இருப்பதாக கூறி, அதனை சிபாரிசு செய்து, சரிசெய்து தருமாறு முத்துகிருஷ்ணனிடம் கூறியுள்ளார். அவருக்காக மதுரை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் வந்து பேசும்போதுதான், சிக்கிக்கொண்டதாக கூறினார்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணனை கைது செய்தனர்.


Next Story